ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 33-வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு பேசிய அருண் ஜெட்லி, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் அனைத்து மாநிலங்களுக்கும் 20-ம் தேதியில் இருந்து நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீருக்கு வரும் 28-ம் தேதிவரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வரும் 24-ம் தேதி மீண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ரியல் எஸ்டேட் மற்றும் லாட்டரிக்கான ஜிஎஸ்டியை மறு ஆய்வு செய்யும் முடிவு அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து லாட்டரிகளுக்கும் ஒரே ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட மகாராஷ்டிர மாநில நிதியமைச்சர் உள்ளிட்ட 8 அமைச்சர்கள் கொண்ட குழு, லாட்டரிகளுக்கு ஒரே ஜிஎஸ்டி விதிக்க ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து 24-ம் தேதி கூடவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட உள்ளது.

Exit mobile version