தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனைகளை வாங்கியோரின் நலன்களை காக்கும் நோக்கிலும் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் வகையிலும் தமிழக அரசு சார்பாக திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இந்த திட்டத்தில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க 6 மாத காலக்கெடு அதாவது 3.11.17 வரை நிர்ணயிக்கப்பட்டது. பிறகு அக்காலக்கெடு 3.11.18 வரை நீட்டிக்கப்பட்டது.
அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க கடைசி நாளான 3.11.18 அன்று சனிக்கிழமை என்பதால் விடுமுறை நாளாக இருந்தது. மேலும் 6.11.18 வரை தீபாவளியை முன்னிட்டு விடுமுறை நாட்களாக இருந்தது. அதனால் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த குறுகிய கால வாய்ப்பு கோரி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதன்படியே அரசு அங்கீகரிக்கபடாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பங்களை இணையதளம் ( www.tnlayoutreg.in) வழியாக 12.11.18 முதல் 16.11.18 வரை 5 நாட்களுக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Discussion about this post