காதலர் தினத்தை முன்னிட்டு 50 லட்சம் ரோஜா மலர்கள் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பேரிகை, பாகலூர், கெலமங்கலம், தளி, உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில், தாஜ்மகால், ரோடோஸ், நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பேர்னியர், கார்வெட், டிராபிக்கல் அமேசான் உள்ளிட்ட 30 வகையான ரோஜா மலர்கள் பல லட்சம் செலவில் பசுமை குடில்கள் அமைத்து உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள், பண்டிகை காலங்களில் குவைத், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், லெபனான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு, 2 கோடி ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக இந்தாண்டு 50 லட்சம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக சாகுபடியாளர்கள் தெரிவித்தனர்.
இதேபோல், சேலம் மாவட்டம் கருமந்துறை செம்பரக்கை மலைப்பகுதியில் ரோஜா மலர்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜாப் பூக்கள் ஆத்தூர், சேலம், திருச்சி போன்ற மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது, ரோஜா பூக்கள் உற்பத்தியில் நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதால், மலர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Discussion about this post