தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப், விசாரணைக்கு பிறகு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மாலத்தீவில் உள்ள தூனிதூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 27-ந்தேதி மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த இழுவை கப்பலில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் ரகசியமாக ஏறி வந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், இழுவை கப்பல் தூத்துக்குடி கடல் பகுதிக்கு வந்தபோது, அதனை வழிமறித்தனர். அதில் இருந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப்யிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், அந்த கப்பலை அங்கிருந்து செல்லாமல் நிறுத்தி வைக்குமாறும், கப்பலில் இருந்து அகமது ஆதீப்பை கீழே இறக்க வேண்டாம் என்றும் கடலோர காவல் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் தொடர்ந்து இழுவை கப்பலிலேயே பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் பல்வேறு உளவுப்பிரிவு போலீசாரும், அவரிடம் விசாரணை நடத்தினர். இதை அடுத்து, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நீண்ட விசாரணைக்கு பிறகு, மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் திருப்பி அனுப்பப்பட்டார். அவர் தப்பி வருவதற்கு முன், அரசு நிதியில் மோசடி செய்த புகாரில், மாலத்தீவு அரசு, அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க இருந்தது. இந்நிலையில், மாலத்தீவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அகமது ஆதீப், அங்குள்ள தூனிதூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Discussion about this post