விஜய் பிறந்த நாளுக்கு போட்டியாக, அஜித் தொடர்பான ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அது தொடர்பான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
விஜய், அஜித் என்று ஒரு களிமண் உருண்டையில் எழுதி, அதை கூட்டத்தில் வீசினால் கூட, நிச்சயம் அது வெடித்துச் சிதறும் எனுமளவிற்கு, இருவரின் ரசிகர்களின் மத்தியிலும் காலங்காலமாய் போட்டி நிலவுகிறது.
விஜய் திரைப்படம் வெளியாகும்போது அஜித்தை கிண்டல் செய்வது, அஜித் திரைப்படம் ரிலீஸாகும்போது விஜய்யை கிண்டல் செய்வது என, முன்பிருந்த ரசிகர்கள் இப்போது அந்த வேலையைச் செய்வதற்கு சமூக வலைதளங்களை குத்தகைக்கு எடுத்துவிட்டனர்.
யாருடைய புகழ் உச்சியில் உள்ளது என ஒரு கை பார்த்துவிடுவோம் என்று, டேட்டாவை ஆன் செய்து உட்காரும் ரசிகர்கள், தங்களுக்கு பிடித்த நடிகர்கள் பற்றிய புகழைப் பாடி, அவற்றை ட்ரெண்ட் செய்கின்றனர். கடந்த மே 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளன்று, விஜய்யின் மாஸ்டர் படம் தொடர்பான ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து விஜய் ரசிகர்கள் வெறித்தனம் காட்டினார்கள்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று விஜய்யின் 46 வது பிறந்தநாளில், அஜித் பற்றிய ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஒப்பிடமுடியாத அளவுக்கு உயர்ந்தவர் அஜித் என்று சொல்லும் வகையில் Nonpareil தல அஜித் என ஹேஷ்டேக் உருவாக்கி, அதை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
விஜய் பிறந்தநாளில் அஜித்தை உயர்வாக காட்டவேண்டும் என்ற நோக்கத்தோடு செயலாற்றிவரும் அஜித் ரசிகர்கள், விஜய்யை தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்யாமல் அஜித்தின் புகழை மட்டும் பாடுவது ஆரோக்யமான முன்னேற்றம்தான். ஒரு காலத்தில் எதிரிகள் போலவே செயல்பட்ட இரு நடிகர்களின் ரசிகர்களும், இப்போது மைதானத்தில் மோதிக்கொள்ளும் விளையாட்டு வீரர்களைப் போல, தாங்கள் யாருடைய ரசிகர் என்று புகழ்பாட ஆரம்பித்திருக்கிறார்கள். பிறந்தநாளின் போதும், பெரும்பான்மையான விஜய் ரசிகர்கள் இவ்வாறு செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பக்குவம் தொடர்ந்தால், ஒரு அஜித் ரசிகனும், விஜய் ரசிகனும் தோள்மீது கைபோட்டு ஒன்றாக அமர்ந்து தங்களின் நாயகர்களை ரசிக்கும் காலம் விரைவில் கைகூடும் என நம்பலாம்.
Discussion about this post