தமிழில் புதுக்கவிதை வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றிய புயல் ஈரோடு தமிழன்பனின் 88-வது பிறந்தநாள் இன்று. புதிய வடிவங்கள் தந்த புரட்சிக் கவிஞரை வாழ்த்துகிறது இந்தச் செய்தித் தொகுப்பு..,
ஜெகதீசன் என்ற இயற்பெயரைக் கொண்ட ஈரோடு தமிழன்பன், கவிதையின் மறுமலர்ச்சிக் காலத்தில் இயங்கிய மகத்தான கவிதை இயந்திரமாவார்.
பேராசியராகவும், பிரபல செய்தி வாசிப்பாளராகவும் திகழ்ந்த இவர், அடிப்படையில் கவிஞர் ஆவார். சென்னிமலை தமிழ்க் கவிதை உலகுகுக்குத் தந்த 2-வது செழுங்கொடை – ஈரோடு தமிழன்பன்.
ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ
தங்கத்தை மகுடமாய்ச் சூடி
அதற்கு அடிமையானோம்!
தமிழில் மேற்கத்திய கவிதை வடிவங்களைப் பிரபலப் படுத்திய ஈரோடு தமிழன்பன், பாரதியார் சொன்ன நவகவிதை என்ற வாக்கை மெய்ப்பித்து, பழமொன்றியூ, லிமரைக்கூ உள்ளிட்ட புது கவிதை வடிவங்களையும் உருவாக்கினார்.
கவிஞர்களிடையே இன்னொரு மகாகவி என்றே ஈரோடு தமிழன்பன் அழைக்கப்படுகிறார்.
தமிழ் யாப்பியலையும், இலக்கண கூறுகளையும் கற்றுத் தேர்ந்த கவிஞரான இவர், தமிழகத்தின் முன்னணிக் கவிஞர்களோடு எண்ணிலடங்காக் கவியரங்க மேடைகளில், சூரியனாக ஒளிவீசியவர்.
சென்னிமலை மண்ணின் தறியோடை சந்தங்களைச் சொற்கட்டுகளில் பூட்டி, தமக்கெனத் தனி பாணி அமைத்துக் கொண்டார்.
தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளைப் படைத்தளித்த இவர், ‘வணக்கம் வள்ளுவ’ என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதையும் சொந்தமாக்கினார்.
அதுவே கவிதை வடிவில் வெளியான முதல் திறனாய்வு நூலாகும். அவரது, ‘உன் வீட்டுக்கு நான் வந்திருந்தேன்… வால்ட் விட்மன்’ என்ற கவிதைநூல், தமிழின் முதல் புதுக்கவிதை பயண இலக்கியம் ஆகும்.
‘ஒரு வண்டி சென்ரியூ’, ‘ஒரு கூடை பழமொன்றியூ’, ‘கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்’, ‘சென்னிமலை கிளியோபாத்திராக்கள்’ என ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட கவிதை நூல்களைக் கொடுத்த கவின் தமிழரை பேரன்புடன் வாழ்த்துகிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி…
செய்திக் குழுவுடன் விவேக்பாரதி…
Discussion about this post