தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
தமிழகத்தில் நடப்புக்கல்வி ஆண்டில் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பம் செய்த 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இதையடுத்து பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் மூன்று நாட்கள் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
2ம் நாளான நாளை, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 7 பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது. நாளை மறுநாள், விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 8 பிரிவுகளில் நடைபெறுகிறது.
பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்த கலந்தாய்வு 7 பிரிவுகளாக நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் சென்னை தரமணியில் நடைபெற்ற கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் துவக்கி வைத்தார்.
Discussion about this post