பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ந் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மக்களவை தேர்தல் ஏப்ரல் 18ந் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெறும். (தமிழ்நாடு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கும்).
மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 21 சட்டமன்ற தொகுதிக்கும் ஏப்ரல் 18ந் தேதி இடைத்தேர்தல்
தமிழகத்தின் காலியாக உள்ள 21 தொகுதி சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகள்:
பெரம்பூர், சோளிங்கர், ஒட்டப்பிடாரம், சாத்தூர், விளாத்திக்குளம், பரமக்குடி, திருப்போரூர், பூந்தமல்லி, நிலக்கோட்டை, ஆம்பூர், குடியாத்தம், அரவக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தஞ்சாவூர், அரூர், மானாமதுரை, திருப்பரங்குன்றம், திருவாரூர், ஓசூர்.
2ஆம் கட்டத் தேர்தலில் அசாம், பீகார், சட்டீஸ்கர் காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், புதுவை ஆகியவைகளுக்கு வாக்குபதிவு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் மக்களவை தேர்தலின் முக்கிய தேதிகள்:
தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26.
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 27.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 29ம் தேதி.
7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல்:
1. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி நடைபெறும்.
2. 2ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 18.
3. 3ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 23.
4. 4ஆம் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 29.
5. 5ஆம் கட்ட வாக்குப் பதிவு மே 6.
6. 6ஆம் கட்ட வாக்குப் பதிவு மே 12
7. 7ஆம் கட்ட வாக்குப் பதிவு மே 19
மக்களவை தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையரின் விளக்கம்:
மக்களவை தேர்தல் குறித்து விரிவான ஏற்பாடுகளும், ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். மேலும், வாக்காளர் பட்டியல், சரி பார்க்கும் பணி குறித்து அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த தேர்தலில் 90 கோடி பேர் ஓட்டுப்போட உள்ளனர் என்று தெரிவித்தார். இம்முறை, 18 முதல் 19 வயது வரை 1.5 கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும், புதிய வாக்காளர்களாக 8.4 கோடி பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேவைக்கு அதிகமான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார். மேலும், நாடு முழுவதும் 10 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து சாவடிகளிலும், யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு முறை பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பின் சிறப்பு அம்சங்கள்:
1.வாக்காளர் பட்டியல் விவரங்களை தெரிந்து கொள்ள 1950 சேவை எண் உருவாக்கப்பட்டுள்ளது.
2.நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள்.
3.மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள்.
4.பள்ளித்தேர்வு, விழாக்கள் உள்ளிட்டவைகளை கருத்தில்கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.
5.தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமல்.
6.பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கண்காணிக்கப்படும்.
7.தேர்தல் விதிகளை மீறுபவர்கள் குறித்த வீடியோ ஆதாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உத்தரவு.
Discussion about this post