தேர்தல் என்பது ஒரு திருவிழா. கொண்டாட்டத்துடன் தேர்தலை நாம் அணுகும் விதமே வேறு. இந்தநிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளை மதுரையில் சித்திரை தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் தேர்தல் திருவிழாவையும், கள்ளழகர் விழாவையும் ஒரேநாளில் கொண்டாடுகின்றனர். இதுகுறித்த செய்தி தொகுப்பை காணலாம்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன. வாக்குச்சாவடி மையங்களும் மக்களை வரவேற்க தயார் நிலையில் உள்ளன. இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் இன்னொரு திருவிழாவுக்காக மக்கள் காத்துக்கொண்டுள்ளனர். அது கள்ளழகர் திருவிழா… தேர்தல் நடைபெறும் அதே நாளில் தான் சித்திரை தேர்திருவிழா நிகழ்வும் நடைபெற உள்ளது. மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு கள்ளழகர் திருவிழா மிக முக்கியமான திருவிழாக்களில் ஒன்று. அப்படி இருக்கும் போது தேர்தல் திருவிழாவும் கள்ளழகர் திருவிழாவும் ஒரே சமயத்தில் வருவது மக்களுக்கு இரட்டை சந்தோசம் என்று சொல்கிறார்கள்.
மதுரை மக்கள் மட்டுமல்லாது நகரங்கள் பல கடந்தும் அன்னை மீனாட்சியை தரிசிக்க லட்சோப லட்சம் மக்கள் கூடுகின்ற நாளில்தான் விரலில் மையிட்டு ஜனநாயக கடமையாற்றுகின்ற தேர்தலையும் இந்த நகரம் சந்திக்க இருக்கிறது.
மாசி வீதிகளில் அசைந்தாடும் தேர் அழகாக சென்று வர ஏற்பாடு நடைபெறும் நிலையில் வாக்குப்பதிவை நூறு சதவிகிதம் பெற்றே ஆக வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் இரவு 8 மணி வரையில் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
மதுரையில் தேர்தலும் திருவிழாவும் ஒரே நாளில் வருவதால் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் காவல் துறை நிர்வாகமும் முனைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post