5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2 தேதி நடைபெற உள்ள நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு மட்டும் கடைசி வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகிற 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா பரவல் காரணமாக வருகிற 2ம் தேதியன்று எவ்வித வெற்றி கொண்டாட்டங்களும் நடத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் ஆணையம், நோய் தடுப்பு நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தேர்தல் ஆணையம், அரசின் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று, ஐந்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கை விதிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post