அசுரன் பட பாணியில் தனது தந்தைக்கு ராணுவத்தில் பணிபுரிந்ததற்காக அளிக்கப்பட்ட 1 ஏக்கர் 23 சென்ட் பஞ்சமி நிலத்தை மீட்க 3 தலைமுறையாக போராடி வருகிறார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அம்பேத்கர் காலனியில் மாணிக்கம் என்பவர் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். மாணிக்கம் என்பவரின் தந்தையான சாமி ராணுவத்தில் பணிபுரிந்ததற்காக 1930ல் 1 ஏக்கர் 23 சென்ட் வழங்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் போதுமான வளர்ச்சி இல்லாததால் சாமி சாம்பான் அந்நிலத்தை அப்படியே விட்டுவிட்டு அருகிலிருந்த இடத்தில் குடியேறினார். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த கல்யாணி செட்டியார் அந்த நிலத்தை இரவலாக பெற்று ரைஸ் மில் வைத்துள்ளார்.
மேலும் சாமி சாம்பானின் வாரிசுகளுக்கு வேலை தருவதாகவும், தேவைப்படும் போது நிலத்தை திரும்ப தந்து விடுவதாகவும் தெரிவித்தாக கூறப்படுகிறது. நிலத்தை பெற்ற பின் சாமி சாம்பானை ஏமாற்றி தனது பெயருக்கு பத்திரம் பதிவு செய்து பட்டாவும் பெற்றுள்ளார். அதன்பின் நிலம் பல்வேறு நபர்களுக்கு கைமாறியுள்ளது.
சாமி சாம்பான் நோய்வாய்ப்பட்டு இறந்து விட அவரது மகன்களான ராஜையா, மாணிக்கம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கும் புகார் மனு அனுப்பியுள்ளனர். காலங்கள் கடந்துவிட 15 வருடங்களுக்கு முன்பு ராஜையா காலமாகி விட்டார். தற்போது 90 வயது நிரம்பியுள்ள நிலையில் மாணிக்கம் மட்டும் தனிநபராக நிலத்தை மீட்கப் போராடி வருகிறார்.
வள்ளியூர் பேரூந்து நிலையம் அருகில் இருக்கும் அந்த நிலத்தின் மதிப்பு தற்போது பல கோடி ரூபாய் எனக் கூறுகிறார் மாணிக்கம். அந்த நிலத்தில் தற்போது ஒரு தனியார் மருத்துவமனையும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றம் திருமண மண்டபமும் கட்டப்பட்டு வருகிறது. இன்றளவும் அந்த நிலம் தன் தாத்தாவின் பெயரிலேயே குறிப்பிடப்படுவதாக கூறுகிறார் சாமி சாம்பானின் பேத்தியும் ராஜையாவின் மகளுமான காந்திமதி
இந்த பஞ்சமி நிலத்தின் மூலப் பத்திரம் இன்றளவும் முதியவர் மாணிக்கத்திடம் பத்திரமாக உள்ளது. தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக போராடி வரும் முதியவர் மாணிக்கம் பாப்பாத்தி தம்பதியினர் தற்போது பிழைக்க வழியின்று கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். அசுரன் பட பாணியில் தனது தந்தைக்கு ராணுவத்தில் பணிபுரிந்ததற்காக அளிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க தள்ளதா வயதிலும் போராடி வருகிறார்.
பஞ்சமி நிலம் தொடர்பாக சமீபத்தில் பேசிய ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி பஞ்சமி நிலங்கள் நிச்சயம் மீட்கப்படும் எனத் தெரிவித்தது மாணிக்கம் போன்ற பஞ்சமி நிலங்களை மீட்கப் போராடுபவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post