தமிழகத்தின் கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த தினமான இன்று கல்வி வளர்ச்சி நாளாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தின் கல்வி வளர்ச்சி தனித்துவமானது. தலைசிறந்தது. பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொண்டது. கல்வி வளர்ச்சியில் தமிழகம் அடுக்கடுக்கான சாதனைகளைப் படைக்க, நீதிக் கட்சி காலத்திலேயே விதைகள் தூவப்பட்டாலும், அதை கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்தவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர்.
1954-ஆம் ஆண்டு முதல் 1957-ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்த காமராஜர், தனது ஆட்சியில் கல்வியை இலவசமாக்கினார். அவருடைய அந்த நடவடிக்கையே, தமிழகத்தின் கல்விக் கண்ணைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முதல் தொலைநோக்கு நடவடிக்கை. இலவசக் கல்வி திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், அதைக் கற்றுக் கொள்ள வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. அதைக் கருத்தில் கொண்ட காமராஜர், பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
1957-ஆம் ஆண்டு எட்டையபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தத் திட்டம், தமிழகம் முழுவதும் வேகமாக விரிவுபடுத்தப்பட்டது. பள்ளிக்கு அனுப்பினால், பிள்ளைகளின் பசி தீரும் என்றெண்ணிய ஏழைப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தொடங்கினர். அதன்மூலம் கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. தமிழக கல்வி வளர்ச்சியின் சதவீதம் 80.33 சதவீதம் என்றால், அதில் பெண் கல்வி வளர்ச்சியின் சதவீதம் 73.86 சதவீதம். இது மற்ற மாநிலங்களால் எட்ட முடியாத பெருமை.
காமராஜரைத் தொடர்ந்து தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அண்ணாவும், அண்ணாவின் வழியில் ஆட்சி அமைத்த எம்.ஜி.ஆர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆகியோர் தமிழகத்தின் கல்வி வளர்ச்சியில் தனி அக்கறை செலுத்தினர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டம் சத்துணவாக மாறியது. மாணவர்கள் கண்ணியமாக காட்சியளிக்க இலவச சீருடை, இலவச காலணிகள், இலவச மடிக்கணிணி, இலவச சைக்கிள், இலவச பஸ் பாஸ் என அடுக்கடுக்கான சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் காரணமாக, கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கல்வியில் புதிய மறுமலர்ச்சி உருவானது.
5 ஆயிரம் உயர் நிலைப் பள்ளிகள், சுமார் 10 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகள், சுமார் 34 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள், புகழ் பெற்ற பல்கலைக் கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் என தமிழகத்தின் கல்வி கட்டமைப்பு நவீன வசதிகளுடன், மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்போடு உருப்பெற்றன. மற்ற மாநிலங்களில் நிலவுவதைப் போல் அல்லாமல், பரவலான கல்வி வளர்ச்சியை, அடர்த்தியான முறையில் தமிழகம் எட்டிப்பிடித்தது. அதற்கு அடித்தளமிட்ட காமராஜரின் பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவது பொருத்தமானதே!
Discussion about this post