திமுக ஆட்சியில் மக்களுக்கு எதுவுமே செய்யாததால், ஸ்டாலினால் சாதனைகளை கூறி வாக்கு கேட்க முடியவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து சிந்திக்காமல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை தமிழ்நாட்டிற்குள் திமுக அனுமதித்ததை விமர்சித்தார்.
காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், கோதாவரி – காவிரி நிதிநீர் இணைப்பு திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.
அதற்காக ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர்களை நேரில் சந்தித்து ஆதரவு பெற்றுள்ளதையும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ஓ.எஸ்.மணியனை ஆதரித்து, முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், வண்டுவாஞ்சேரியில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் உணவுப் பூங்கா அமைக்கப்படுவதால், ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்தார்.
அதிமுக அரசு செயல்படுத்திய, செயல்படுத்தப்படவுள்ள எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர், திமுக ஆட்சியின் சாதனைகளில் ஏதேனும் ஒன்றை கூறி ஸ்டாலினால் வாக்கு கேட்க முடியவில்லை என்று விமர்சித்தார்.
ஆட்சியில் இருக்கும்போது நாட்டு மக்கள் குறித்து திமுகவினர் சிந்திக்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் குற்றம் சாட்டினார்.
உப்பு சத்தியாகிரக போராட்ட தியாகி சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் வாக்குறுதி அளித்தார்.
Discussion about this post