நெதர்லாந்து நாட்டிலிருந்து விமானம் மூலம், சென்னைக்கு வந்த பார்சலில், போதை மாத்திரைகள் கடத்தப்பட்டதைக் கண்டறிந்த சுங்கத்துறையினர், அவற்றைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை விமானநிலையத்தில் உள்ள கொரிய நாட்டின் பார்சல் பிரிவிற்கு, பிற நாடுகளில் இருந்து வந்திருந்த பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், நெதர்லாந்து நாட்டிலிருந்து சென்னை அம்பத்தூரில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சல் வந்திருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட அந்தப் பார்சலைச் சோதனையிட்டபோது, அதில் மருந்துப் பொருட்கள் என எழுதப்பட்டிருந்தது. சமீபநாட்களாக, மருந்துப் பொருட்கள் என்ற பெயரில் வரும் பார்சல்களில், போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதனால் சந்தேகத்தின் அடிப்படையில், நெதர்லாந்து நாட்டில் இருந்து வந்த பார்சலை அதிகாரிகள் தனியே எடுத்துவைத்து, அதில் இருந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டனர். அதில், அந்த எண் உபயோகத்தில் இல்லை என்பது தெரியவந்தது. அதையடுத்து, பார்சலில் குறிப்பிட்டிருந்த அம்பத்தூர் முகவரியை சோதனை செய்து பார்த்தபோது, அதுவும் போலியான முகவரி என்பது தெரியவந்தது.
அதையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்தப் பார்சலை உடைத்துப் பார்த்தபோது, அதில், ஆரஞ்சு வண்ணத்தில், 100 மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. அந்த மாத்திரைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், அவை ‘மெத்தோ கெட்டமைன்’ வகையைச் சேர்ந்த (Red Bull) என்ற போதை மாத்திரைகள் என்பதைக் கண்டறிந்தனர். அதன் தற்போதைய சந்தை மதிப்பு 3 லட்சம் ரூபாய் என்றறிந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை விமானநிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் பார்சல்களில் இருந்து, போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படுவது இது நான்காவது முறையாகும்.
Discussion about this post