சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய ஆழ்துளை மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் சமீப காலமாக குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதையொட்டி, தமிழக அரசும், குடிநீர் வாரியமும் போர்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெரு பகுதியில் முதல் முறையாக ஆழ்துளை மோட்டார் பம்பு அமைத்து, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில், குறுகலான பாதைகள் உள்ளதால், குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, குடிநீர் வாரிய அதிகாரிகள் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். இதையடுத்து, அங்கு ஆழ்த்துளை கிணறு அமைத்து மின் மோட்டார் மூலமாக நீர் உறிஞ்சப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முறையை குடிநீர் வாரிய அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.
பல ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளித்த குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கும், தமிழக அரசுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post