கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோரிடம், பெருந்தொற்று ஆபத்தை எடுத்துக்கூறி, காவல்துறையினர் தன்மையாக நடந்துகொள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார்.
முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சென்னை பெருநகர காவல்துறை சார்பில், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நிகழ்ச்சியில் பங்கேற்று, விழிப்புணர்வு உரையாற்றி, பொதுமக்களுக்கு முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை மாநகரில் முகக்கவசம் அணியாமல் சென்ற 90 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விதி மீறி கூடுதல் நேரம் கடைகளை திறந்து வைத்தால் காவல்துறையினர் அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்தார்.