உலக தாய்ப்பால் வார தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், 48 விழுக்காடு பெண்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஆகஸ்ட் 1 முதல் 7-ம் தேதி வரை ‘உலக தாய்ப்பால் வாரம்’ கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தவறாமல் தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கவும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் கூட்டுவதற்கும் தமிழக அரசு சார்பிலும் மருத்துவ துறையின் மூலமாகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, குடும்பம் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால், தாய்ப்பால் கொடுக்க இயலாத நிலையில் பல்வேறு பெண்கள் உள்ளதால், அவர்களை ஊக்குவிக்கும் முன்னெடுப்பாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.
அதேபோல், பெண்கள் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டினால் அழகு குறைவதாகத் தவறான எண்ணம் கொண்டுள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில், தாய்ப்பால் ஊட்டினால் எப்படி ஓரளவிற்கு உடல் எடை குறைகிறதோ, அதுபோலவே, ஹார்மோன்களை அதிக அளவில் சுரக்கச் செய்து, முகப்பொலிவையும் அழகையும் கூட்டுவதாக கூறி, மருத்துவர்கள் வியக்கவைக்கின்றனர். மேலும், குழந்தை பிறந்து 1 மணி நேரத்திற்கு உள்ளாகவே தாய்ப்பாலைக் கொடுக்கவும் உலக உடல்நல ஆரோக்கிய நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
ரத்த வங்கி, உடல் உறுப்புகள் வங்கி போன்று அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கியும் செயல்பட்டு வருவதாகவும், தன்னுடைய குழந்தைக்கு கொடுத்ததுபோக, மீதமுள்ள தாய்ப்பாலை தாரளமாக தானம் செய்ய தாய்மார்கள் முன் வரலாம் எனவும் மருத்துவர் விஜயா அறிவுறுத்தியுள்ளார்.
48 விழுக்காடு பெண்கள் மட்டுமே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதாக மருத்துவர்கள் வருத்தம் தெரிவித்துள்ள நிலையில் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கு தடையின்றி தாய்ப்பால் ஊட்டுவதை அதிகரிக்க மனதளவில் வலுவாக இருக்க வேண்டும் எனவும், குறைந்தது 6 மாதங்கள் வரை தாய்ப்பால் கட்டாயமாக கொடுக்க வேண்டும் எனவும், அதற்கு ஒவ்வொரு தாய்மார்களும் முன்வர வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
Discussion about this post