இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் என்றாலே பிரியாணி உணவு முக்கிய இடத்தை பெறுகிறது. பிரியாணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன என்று கூறும் போது அதனை ருசிக்க வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் இருக்கும்….ஆம் நேயர்களே, நாம் அறிந்திராத பிரியாணி வகைகள் குறித்த ஒரு சிறப்பு தொகுப்பினை தற்போது காணலாம்.
தமிழகத்தை பொருத்தவரை, சீரக சம்பாவில் செய்யக்கூடிய செட்டிநாடு பிரியாணி, ஆம்பூர் சீரக சம்பா பிரியாணி, திண்டுக்கல்
தலப்பாக்கட்டி பிரியாணி என்று நூற்றுக்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் உள்ளதை நாம் ருசித்திருப்போம், ஆனால் அரபு நாடுகளில், ஈகை திருநாளின் போது கருவாட்டு பிரியாணி, முழு ஆடு பிரியாணி போன்றவை முக்கிய பாரம்பரிய உணவாக இடம் பிடிப்பதாக கூறுகின்றனர் பிரியாணி தயாரிப்பாளர்கள்..
வடமாநிலங்களில் பிரபலமான முதஞ்சன் பிரியாணி என்று சொல்லக்கூடிய முழுக்க முழுக்க இனிப்பால் ஆன ஸ்வீட் பிரியாணி, பழவகைகளை கொண்டும் செய்யப்படும் ஃபுரூட்ஸ் பிரியாணி, பாலை கொண்டு செய்யக்கூடிய பால் பிரியாணி, மந்தி என்று அழைக்கக் கூடிய முழு ஆடு பிரியாணிகளும் சென்னையில் மிக சுலபமாகவே கிடைக்கிறது என்கின்றனர் பிரியாணி தயாரிப்பாளர்கள். இப்படி வகை வகையாக 135 க்கும் அதிகமான பிரியாணிகள் வகைகள் இருந்த போதிலும், அடித்தட்டு மக்களின் பிரியாணி ஆசையை பூர்த்தி செய்வதாக உள்ளன சென்னையின் பல இடங்களில் உள்ள பிரியாணி கடைகள்.
வருடத்தின் எல்லா நாட்களிலும் பிரியாணி சாப்பிட்டாலும், ரம்ஜான் நேரத்தில் சாப்பிடக்கூடிய பிரியாணி சுவை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக தெரிவிக்கின்றனர் பிரியாணி பிரியர்கள்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் எவ்வளவுதான் பிரியாணி சாப்பிட்டாலும், ரம்ஜான் நேரத்தில் சாப்பிடக்கூடிய பிரியாணியின் இனிமையான நினைவுகள், அடுத்த ஆண்டு ரம்ஜான் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்புகளோடு நம்மை காத்திருக்க வைக்கும்…