கொரோனா பயம் வேண்டாம்; ஆனால் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் : அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்!

 தமிழகத்தில் யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை எனவும், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமெனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கிய நாளில் இருந்து சென்னை உள்ளிட்ட 4 விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், உரிய அனுமதி பெற்று, சென்னை விமான நிலைய மருத்துவ அதிகாரிகளுடன் இணைந்து தமிழக சுகாதாரத்துறை மருத்துவர்களும் கொரோனா பரிசோதனையை தொடங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், விமான நிலையத்தில் இதுவரை 1,00,111 பேரை பரிசோதனை செய்துள்ளதாகவும், அவர்களில் 1,243 பேரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார். 54 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை என்பது தெரியவந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், அவர்களில் 2 பேர் தான் இறக்கிறார்கள். எனவே, கொரோனா குறித்த பதட்டம் வேண்டாம் என்று கூறிய அவர்,  நோய் குறித்த பயம் வேண்டாம்; ஆனால், கவனக்குறைவாக இருக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். அதோடு, மாவட்ட ஆட்சித்தலைவர் சொல்வதை, சுகாதாரத்துறை சொல்வதை வணிக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், கேரளாவில் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், மாநில எல்லையில் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version