உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்கள் முதலில் பரிசோதிப்பது நோயாளியின் ரத்த அழுத்தத்தை தான். உடலின் ரத்த அழுத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக சுகாதார நிறுவனம் மே 17ஆம் தேதியை உயர் ரத்த அழுத்த தினமாகக் கடைப்பிடிக்கிறது. ரத்த அழுத்தம் குறித்தும், அதனைக் கட்டுப்பாடோடு வைத்திருப்பது குறித்தும் இப்போது காண்போம்.
நீங்கள் பரபரப்பு ஆசாமியா? சர்க்கரை நோய் இருக்கிறதா? உடல் பருமன் உள்ளதா? புகை மற்றும் மதுப்பழக்கம் உள்ளதா? அடிக்கடி கோபம் வருகிறதா? எதற்கெடுத்தாலும் எரிச்சல் ஏற்படுகிறதா?… இதில் ஏதேனும் ஒன்றுக்கு ஆம் என்றால் இன்றே மருத்துவரிடம் சென்று உங்கள் ரத்த அழுத்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்… ரத்த அழுத்தம் ப்ரைமரி, செகண்ட்டரி என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ளது. இயல்பாகவே சிலருக்கு இருக்கும் ரத்த அழுத்தம் ப்ரைமரி என்றும், இணை நோய் பாதிப்பால் ஏற்படக்கூடிய ரத்த அழுத்தம் செகண்டரி என்றும் கூறப்படுகிறது.
உடல் எடை அதிகரிப்பு, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது, கொழுப்பு நிறைந்த பண்டங்களை கூடுதலாக எடுத்துக் கொள்வது ஆகியவையே ரத்த அழுத்தத்துக்கான காரணம் என்று கூறும் மருத்துவர்கள், ரத்த அழுத்தத்தால் ஏற்படும் பக்க விளைகள் குறித்தும் எச்சரிக்கின்றனர்.
தற்போதைய காலகட்டத்தில், ரத்த அழுத்த பாதிப்பு என்பது கொரோனா நோயாளிகளின் உயிரிழப்புக்கே கூட காரணமாகிறது என்ற வேதனைக்குரிய செய்தியையும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், 40 வயதைத் தாண்டியவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், தொப்பை ஏற்படாமல் உடலைப் பராமரிப்பதும், உணவில் உப்பினை அதிகம் சேர்க்காமல் இருப்பதுமே ரத்த அழுத்ததைக் கட்டுப்படுத்தும் என்கின்றனர்.
உயர ரத்த அழுத்தத்தின் பாதிப்புகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய பிரசாரத்தை 2005ல் துவங்கியது. நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பார்கள். நமது ரத்த அழுத்தத்தை 120ன் கீழ் 80 என்ற அளவில் சரியாக வைத்திருந்து, நோயற்ற வாழ்வினை வாழ, இன்றைய உலக உயர் ரத்த அழுத்த நாளில் உறுதியேற்போம்.
நியூஸ் ஜெ. செய்திகளுக்காக கோபாலகிருஷ்ணன்.
Discussion about this post