செல்போன்களுடன் வருபவர்களை அனுமதிக்க வேண்டாம்: எடியூரப்பா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தன்னை சந்திக்க வருபவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதற்கு தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் முந்தைய குமாரசாமி அரசு கலைக்கப்பட்டது தொடர்பாக, எடியூரப்பா பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியானது. இதில் பாஜக தலைவர் அமித் ஷாவின் தூண்டுதலின் பேரிலேயே அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக பேசியிருந்தார். கர்நாடக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை காங்கிரஸ் உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது.

இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் இந்த ஆடியோ முக்கிய ஆதாரமாக சேர்த்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தன்னைக் காண வருபவர்கள் செல்போன்களை எடுத்து வர வேண்டாம் என முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக எடியூரப்பாவின் வீட்டின் முன்புறம் அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டுள்ளதாகவும், செல்போன்களுடன் வருபவர்களை அனுமதிக்க வேண்டாம் என காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version