திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்று, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பூரில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் பா.ம.க வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். வழியெங்கும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தியாவிலேயே எளிமையான முதலமைச்சர் பழனிசாமி என்று பாராட்டு தெரிவித்த அன்புமணி ராமதாஸ், அதிமுக தலைமையிலான கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.
நல்லம்பள்ளி, மற்றும் தர்மபுரி டவுனில் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் பழனிசாமி கூலிப்படைக்கு ஜாமின் எடுக்கும் ஒரே கட்சி திமுக தான் என குற்றம் சாட்டினார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், அரூர் சட்டமன்ற தொகுதியில் சம்பத்குமார், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கோவிந்தசாமியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இண்டூரில், பென்னாகரத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அரூர் தனித்தொகுதி, பாப்பிரெட்டிபட்டி ஆகிய சட்டமன்றத்தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியது அதிமுக அரசுதான் என்றார்.
பாப்பாரப்பட்டி, பாலக்கோட்டில், கூட்டணி வேட்பாளரான அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவு திரட்டிய அவர், நீர் மேலாண்மை திட்டத்துக்காக 4 தலைமைப் பொறியாளர்கள் நியமித்து, பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
வெள்ளிச் சந்தையில் பிரசாரம் செய்த முதலமைச்சர், பின்னர் காரிமங்கலத்தில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே உரையாற்றினார். அப்போது, மத்தியில் வலிமையான ஆட்சி அமைய அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Discussion about this post