தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகவே பொய்யான வாக்குறுதிகளை திமுக அள்ளி வீசுவதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி விமர்சனம் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில், தகவல் தொழில்நுட்ப பிரிவு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு உரையாற்றினார். அதிமுக அரசை ஒரு குறை கூட கூறமுடியாத அளவுக்கு, நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும், சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பான வகையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தி.மு.க.வினர் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு மட்டுமே வாக்குறுதிகளை வழங்குவதாகவும் விமர்சனம் செய்தார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அதிமுக அரசு மீதான பொறாமையில் ஸ்டாலின் குறை கூறி வருவதாக விமர்சனம் செய்தார். அதிமுகவில் கடைக்கோடியில் இருக்கிற தொண்டன் கூட முதல்வர் ஆகலாம் என்பதற்கு தமிழக முதல்வர் தான் உதாரணம் என தெரிவித்த அமைச்சர் தங்கமணி, ஏழை மக்கள் வாழ்வில் முன்னேற்றம் காணும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருவதாக கூறினார்.
முன்னதாக ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக உட்பட மாற்று கட்சிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் அமைச்சர்கள், தங்கமணி,செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Discussion about this post