கருணாநிதி சொன்னதும்… திமுகவில் நடப்பதும்…

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றுள்ளார். 4 ஆம் தலைமுறையாக வாரிசு அரசியலைத் தொடரும் திமுக ஒரு கட்சியா? இல்லை மடமா? – தோலுரிக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு…

’திமுக ஒன்றும் சங்கர மடம் அல்ல, எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு’ என்று சொன்னவர் திமுக தலைவர் மு.கருணாநிதி.

இப்போது அவரது மகன் ஸ்டாலின் திமுகவின் தலைவராகி இருக்கிறார், முன்னர் ஸ்டாலின் வகித்த இளைஞரணி நிர்வாகிப் பதவியை ஸ்டாலினின் மகன் உதயநிதி இப்போது பெற்றிருக்கிறார். இதன் வெளிப்படையான அர்த்தம் ‘ஸ்டாலின்க்குப் பின்னர் திமுகவின் தலைவர் உதயநிதி’ என்பது மட்டும்தான்.

கருணாநிதி எதை இல்லை என்றாரோ, அது இப்போது ஆமாம் என்று ஆகி இருக்கிறது. அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சியை வாரிசு அரசியலால் மடமாகவே மாற்றிவிட்டது கருணாநிதி குடும்பம். இந்த வெட்கக்கேட்டின் வரலாறு மிகநீளமானது…

1967 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது, அதற்காக அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தை தனது மருமகன் முரசொலி மாறனுக்கு வாங்கித் தந்தார் கருணாநிதி. இதிலிருந்தே தொடங்கிவிட்டது கருணாநிதியின் குடும்ப அரசியல்.

1980ல் தனது மகன் ஸ்டாலினை திமுக இளைஞரணியின் ஒரு அமைப்பாளராக்கி ஆழம் பார்த்தார் கருணாநிதி, அதை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், அடுத்த 4 ஆண்டுகளில் எந்தக் கட்சியிலும் இல்லாதவகையில் திமுக இளைஞரணி வலிமையாக்கப்பட்டது. 1984ல் அதற்கு ஸ்டாலினை செயலாளராக்கினார் கருணாநிதி. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால் அன்பகம் ஸ்டாலினுக்கு என்று பேசும் நிலையை உருவாக்கினார்.

1996ல் ஸ்டாலின் சென்னைக்கு மேயராக்கப்பட்டார், 2006ல் தமிழக உள்ளாட்சித் துறை அமைசராக்கப்பட்டார், 2008ல் திமுகவின் பொருளாளரானார், 2009 ஆம் ஆண்டில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக ‘துணை முதல்வர்’ என்ற பதவியை உருவாக்கிய கருணாநிதி அதையும் ஸ்டாலினுக்கே கொடுத்தார். 2017ல் திமுகவின் செயல் தலைவராக்கப்பட்ட ஸ்டாலின், கருணாநிதியின் மறைவுக்குப் பின்னர் திமுகவின் அடுத்த தலைவரானார்.

ஸ்டாலினுக்கு மட்டும்தான் என்று இல்லை, தனது அத்தனை வாரிசுகளுக்கும் அரசியல் பதவிகளை வாரி வழங்கினார் கருணாநிதி. தனது மகன் மு.க.அழகிரிக்காக தென் மண்டல அமைப்புச் செயலாளர் என்ற ஒரு புதிய பதவியை அவர் கட்சியில் உருவாக்கியது அதன் உதாரணம். 2009ல் அழகிரி மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக கருணாநிதியால் உயர்த்தப்பட்டார்.

திமுகவின் பிற யாருக்காகவும் இளைஞரணி செயலாளர், துணை முதல்வர், செயல் தலைவர், தென்மண்டல அமைப்புச் செயலாளர் – போன்ற புதிய பதவிகள் உருவாக்கப்பட்டதே இல்லை… புதிய பதவிகள் கருணாநிதி குடும்பத்தினரின் தனிச் சொத்தாகவே உள்ளன.

இன்னொரு பக்கம், எந்த அரசியல் அனுபவமும் இல்லாத தனது பேரன் தயாநிதி மாறனை மக்களவை உறுப்பினராக்கியதோடு, மத்திய அரசில் பேரம் பேசி அவரை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் மாற்றினார் கருணாநிதி. இது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ’தயாநிதி மாறனுக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று கேள்வி கேட்கப்பட்டபோது, ‘தயாநிதிக்கு இந்தி தெரியும்’ என்று கருணாநிதி கூசாமல் பதில் சொன்னார். இந்தி எதிர்ப்பினால் அரசியலில் வளர்ந்த ஒருவரின் வாயில் இருந்து தமிழகம் இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை!.

2ஜி வழக்கிலும், பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கிலும் சிக்கித் தவிக்கும் தயாநிதி மாறனுக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

முன்னர் மறைத்து வைத்திருந்த தனது துணைவியாரின் மகள் கனிமொழிக்கு 2007ல் மாநிலங்களவை உறுப்பினர் பதவியைக் கொடுத்து கருணாநிதி அழகு பார்த்தார். 2013ல் அவர் மீண்டும் எம்.பி. ஆக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழர் படுகொலையின் போதுகூட காங்கிரஸைத் திட்டாத கருணாநிதி, 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி கைதான போது கொதித்து எழுந்து, ‘கூட்டணியை முறிப்போம், ஆட்சியைக் கலைப்போம்’ என்றெல்லாம் பேசினார். கருணாநிதியின் உண்மையான மொழிப் பற்றை தமிழகம் அன்றைக்குத்தான் முதன் முதலாகக் கண்டது. இதன் பின்னர் 2015ல் கனிமொழி திமுகவின் மகளிரணிச் செயலாளராக்கப்பட்டார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுகவின் சார்பில் அவருக்கு தூக்குத்துடி தொகுதி ஒதுக்கப்பட்டது.

கருணாநிதியின் இந்தப் பாரம்பரியத்தையே ஸ்டாலின் இப்போது கையில் எடுத்திருக்கிறார். அரசியல் களத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அடையாளமே தெரியாமல் இருந்த, திமுகவின் எந்தப் போராட்டங்களிலும் பங்கு கொள்ளாத உதயநிதியை இப்போது மு.க.ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக்கி இருக்கிறார்.

மூன்றாம் கருணாநிதி, நான்காம் அண்ணா, ஐந்தாம் பெரியார் – என்றெல்லாம் அவருக்கு சில ஆண்டுகளாக போஸ்டர்கள் வைக்கப்பட்டுவந்த நிலையில், அந்த அரசியல் அசம்பாவிதம் இன்று நடந்து உள்ளது. கூட்டங்களில் ‘நான் திமுகவின் தொண்டனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்’ என்று பேசிய உதயநிதி தனது தகுதிக்கு தொடர்பில்லாத பதவியை இப்போது ஏற்றதன் மூலம், கருணாநிதி குடும்பத்தின் அரசியல் வாரிசு மரபை மீண்டும் உயர்த்திப் பிடித்திருக்கிறார்.

திமுகவில் அண்ணா காலத்தில் இருந்து கட்சிப் பணியாற்றுபவர்கள் பலர் இருக்க, கருணாநிதி குடும்பத்தினர் கான்வெண்டுகளில் படித்துவிட்டும், மசாலாப் படங்களில் நடித்துவிட்டும் வந்து நிர்வாகிகளாவது அந்தக் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே அவமானம்தான். அந்தவகையில் இது இன்னொரு அவமானம் அரங்கேறிய நாள்!.

Exit mobile version