தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று மத்திய அரசு தனது புதிய வரைவு அறிக்கை மூலம் தெளிவுபடுத்திவிட்டது. இந்த இடைப்பட்ட நேரத்தில் “போலி இந்தி எதிர்ப்பு” நாடகம் போட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். உண்மையில் இந்தியை எதிர்த்த கட்சியா திமுக? வரலாறு என்ன சொல்கிறது பார்ப்போம்…
அறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்கும், எம்.ஜி.ஆர். அவர்களின் பிரிவுக்கும் பின்னர் கருணாநிதியின் தலைமையை ஏற்ற திமுகவில் குடும்ப அரசியல் வளர்ந்த போதே கொள்கை அரசியல் காணாமல் போகத் தொடங்கியது. 1975ன் நெருக்கடி நிலையின் போது திமுகவினரைக் கொடுமைப்படுத்திய காங்கிரஸ் அரசுடன், அடுத்து வந்த 1980 ஆம் ஆண்டிலேல் கூட்டணி கண்டது திமுக. அதன் காரணம் மத்திய அமைச்சரவை மீதான திமுகவின் ஆசைதான்.
தமிழக மக்களிடம் தமிழின் பெருமை பேசிய கருணாநிதி, ‘முத்தமிழ் அறிஞர்’ என்று பட்டம் வாங்கிக் கொண்ட கருணாநிதி, தனது குடும்ப வாரிசுகள் அனைவரையும் சத்தமே இல்லாமல் இந்தி படிக்க வைத்தார்.
கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் 2004 ஆம் ஆண்டில் முதன்முறையாஜ எம்.பி. ஆன உடனேயே அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. அதுபற்றி அனைவரும் விமர்சித்த போது, அதற்கு கருணாநிதி கூறிய காரணம், ‘தயாநிதிக்கு இந்தி நன்றாகத் தெரியும்!’ என்பதுதான்!.
2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறனுக்கு ஆதரவாக, அங்கு இந்தி பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இந்தியிலேயே பிரசாரங்கள் நடந்தன. போஸ்டர்களும் இந்தியில் அடிக்கப்பட்டன என்பது ஊரறிந்த உண்மை. அப்போது கருணாநிதி இது குறித்தெல்லாம் வாயே திறக்கவில்லை.
இன்னொரு பக்கம் திமுகவின் மத்திய அமைச்சர்களும் இந்தியைத் தூக்கிப் பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியைப் புகுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டவர் ‘மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை’ அமைச்சர் திமுகவின் டி.ஆர்.பாலு. இதனால் 2004 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை, ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றில் 45 மைல் கற்கள் இந்தியில் நடப்பட்டன. பின்னர் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் எதிப்பால் பின்னர் அவை பிடுங்கி வீசப்பட்டன.
இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அதிமுகவுக்கு முகம், திமுகவுக்கோ முகமூடி. இதோ இப்போது திமுகவின் முகமூடி இன்னொருமுறை கிழிந்ததையே மத்திய அரசின் புதிய வரைவு அறிக்கை காட்டுகின்றது.