காங்கிரஸ் எதிர்ப்பில் வளர்ந்த கட்சி திமுக என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் ஆரம்ப கால திமுகவில், அறிஞர் அண்ணா 1967- ஆம் ஆண்டு காங்கிரஸ் எதிர்ப்புக் கட்சிகளையெல்லாம் ஒன்று சேர்த்து காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடித்தார்.
1969-ல் அண்ணா மறைந்த பிறகு அடுத்த 10 ஆண்டுகளில் அண்ணா எதிர்த்த காங்கிரஸை கருணாநிதி சேர்த்து கொண்டார்…. இதனால் சந்தர்ப்பவாத திமுகவாக மாறியது கருணாநிதியால்…
“”நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்ற வாசகத்தை வைத்து,1980-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. அதே ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த கூட்டணி தோல்வியை சந்தித்தது.
பிறகு 2003-ம் ஆண்டு கருணாநிதி காங்கிரசுடன் கொண்ட கூடாநட்பு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு அடிப்படையாக அமைந்தது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.2009-ம் ஆண்டில் திமுக-வின் ஆதரவோடு காங்கிரஸ் அரசு பதவியில் நீடித்த காலத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஆனால் போர் உச்சக்கட்டம் அடைந்த சமயத்தில் தமிழகத்தில் பெயருக்கு உண்ணாவிரதம் இருந்து கண்துடைப்பு நாடகம் ஆடினார் கருணாநிதி.
கருணாநிதி நினைத்திருந்தால் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸின் ஆதரவை திரும்ப பெற்று, பெரிய அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி இருக்க முடியும் ஆனால் அதை செய்யவில்லை சந்தர்ப்பவாத கருணாநிதி.காங்கிரஸின் கூட்டணி முறிந்துவிட கூடாது என்று நினைத்த கருணாநிதியின் எண்ணம், அப்பாவி தமிழர்கள் கொல்லப்படக் காரணமாக அமைந்தது.
காவிரி பிரச்னை விஸ்வரூபம் எடுக்க பெரிய காரணமாக அமைந்தது திமுக-காங்கிரஸ் கூட்டணி தான். மத்தியில் காங்கிரஸ் இருந்த சமயத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை குறித்து பெரிய அழுத்தம் எதுவும் கொடுக்காமல், அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரசுக்கு ஜால்ரா போட்டது.காவிரி மேலாண்மை அமைய தாமதமானதிற்கு முக்கிய காரணம்.
1974 ஆம் ஆண்டே காவிரி பிரச்னை தீர்ந்திருக்க வேண்டும். ஆனால் அது தீராததற்கு கருணாநிதியே காரணம் என்று முதுபெரும் தலைவர் பக்தவச்சலம் அப்போதே கூறியிருந்தார்.ஆனால் 2018 ஏப்ரல் மாதத்தில் காவிரி பிரச்னை உச்சத்தில் இருந்த சமயத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசுக்கு பெரிய அழுத்தம் கொடுத்து காவிரி பிரச்னை ஒரு முடிவுக்கு வர காரணமாக அமைந்தது.மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது கருணாநிதியின் மகள் ஊழல் புகாரில் சிறையில் அடைக்கப்பட்டபோது மட்டும் காங்கிரஸ் கட்சியின் நட்பு கூடா நட்பு என்று புலம்பினார்.
பல வருடங்களாக நீடித்த திமுக- காங்கிரஸ் கூட்டணி பந்தம், தொடர் குற்றச்சாட்டுகள், ஊழல் கறைகள், வெறுப்பு, வழக்குகள் போன்ற பிரச்சனைகளால் பிரிந்தது. கடந்த 2014-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி உடைந்தது. இரு கட்சிகளும் தனித்து போட்டியிட்டன
கூட்டணி பிரிந்த போது திமுக தலைவர் கருணாநிதி கூறியது:- நம்முடன் இருந்து துரோகம் செய்த காங்கிரசுடன் இனி கூட்டணி கிடையாது. காங்கிரசுடன் கூட்டணி வைத்து விடுவோம் என்று நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். ஊழல் குற்றச்சாட்டில் கனிமொழிக்கு களங்கம் விளைவித்தும், ஆ.ராசா மீது பழி சுமத்தியும், தயாளு அம்மாளுக்கு துயரத்தை ஏற்படுத்தியதோடு கட்சிக்கும் களங்கம் விளைவித்தவர்கள் அவர்கள். பூஜ்ஜியங்களை போட்டு ஊழல் குற்றச்சாட்டில் திமுக-வை சிக்க வைத்து விட்டார்கள். அதனாலேயே கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சிறைக்கு போனார்கள். இப்படி கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசினார் திமுக தலைவர் கருணாநிதி.
அதே கூட்டத்தில் பாஜக பற்றி கருணாநிதி பேசியது: பாரதிய ஜனதா நம்முடன் கூட்டணி வைக்காத கட்சி இல்லை. பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி ஆகியோர் கண்ணியமான தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்த கோரிக்கை வைத்தாலும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களை மதிப்புமிக்க தலைவர்களாகவே கருதுகிறோம்.
இப்படி பேசிய கருணாநிதி 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி மீண்டும் மலர்கிறது என்று கூறினார். தன் குடும்பத்திற்கு காங்கிரஸ் உதவவில்லை என்றவுடன் காங்கிரஸ் உறவை முறித்த கருணாநிதி மீண்டும் எப்படி இணைத்தார் என்பது அவரைத்தான் கேட்க வேண்டும்.
இந்தநிலையில் தற்போது மீண்டும் திமுக-காங்கிரஸ் கூட்டணி சேர்ந்துள்ளது. அப்பா கருணாநிதிக்கு ஒரு காலத்தில் காங்கிரஸ் கூடா நட்பு…தற்போது மகன் ஸ்டாலினுக்கு கூடியே ஆகவேண்டிய நட்பு…இப்படி சந்தர்ப்பவாத கூட்டணியாக இருக்கும் திமுக-காங்கிரஸ் கூட்டணி எங்கே உருப்பட போகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
Discussion about this post