திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
வேடசந்தூர் பகுதியில் கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து முதலமைச்சர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டம் எதையும் கொண்டு வரப்படவில்லை என்றும், திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என பகல் கனவு காண்பதாகவும் அவர் கூறினார்.
திண்டுக்கலில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் – திமுக ஆட்சியின் போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என குற்றம்சாட்டினார். மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்றால் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக – காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தை தங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்கின்றனர் என்றும், மக்களுக்காக இதுவரை பயன்படுத்தியது இல்லை எனவும் குற்றம்சாட்டினார். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே திமுகவினரின் அராஜகம் எல்லைமீறி சென்று கொண்டிருக்கிறது என்றும், ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் எனவும் கேள்வி எழுப்பினார்.