தி.மு.க. ஆட்சி காலத்தில், அக்கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்கள், எதிரிகள் என பலரின் கதை, சந்ததி இல்லாமல் முடிக்கப்பட்டது. பல கொலைகளுக்கு இன்று வரை விடையில்லை.
1971 ஆம் ஆண்டு அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது, தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டமா? என கேள்வி எழுப்பிய மாணவர் உதயகுமாரின் கதி என்னவானது என்பது இன்றைய தலைமுறைக்கு தெரியவாய்ப்பில்லை.
கருணாநிதிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்குள் புகுந்த காவல்துறை ஒருபுறம் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போது, குண்டர் படை ஒன்று உதயகுமாரின் கதையை முடித்தது. பெற்ற மகனை இழந்து துக்கத்தில் துடிதுடித்துப்போன அவரது தந்தையே, உதயகுமார் உடலைப் பார்த்து இது என் மகன் இல்லை என வாக்குமூலம் அளித்தார். இதன்மூலம் எந்த அளவிற்கு அவர் மிரட்டப்பட்டார் என்பதை அறியலாம். இறந்தது உதயகுமார் தான் என நீதிபதி, என்.எஸ்.ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அறிக்கை கொடுத்தும், கருணாநிதியோ, தி.மு.க.வினரோ தண்டிக்கப்படவில்லை.
1996 முதல் 2001 வரையிலான தி.மு.க. ஆட்சியில், மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர், அண்ணாநகர் ரமேஷ். ஸ்டாலின் தனது ஊழல்களை ரமேஷ் மூலமாகவே நடத்துவதாகவும் கூறப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், ரமேஷ் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க முயன்றபோது, அவர் மாயமானார். 2001 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி, ரமேஷ், அவரது மனைவி, அவரது 3 குழந்தைகளின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தி.மு.க. கூறினாலும், அதற்கான காரணங்களைக் கூற முடியவில்லை. அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், அண்ணாநகர் ரமேஷின் இறப்பு தற்கொலை அல்ல கொலை’ என்று சட்டப்பேரவையிலேயே கூறினார். இருப்பினும் உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், ஏற்பட்ட காலதாமதம், ஆட்சி மாற்றம் போன்றவற்றால், ஸ்டாலின் தண்டனை பெறாமல் தப்பினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா. 2011ம் ஆண்டு மே 16 ஆம் தேதி சாதிக் பாட்சா உடல் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது இல்லத்தில் மீட்கப்பட்டது. அவர் இறப்பு தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன? எந்த ரகசியத்தை மறைக்க அவரது வாய் நிரந்தரமாக மூடப்பட்டது? – என்ற கேள்விகள் அப்போது எழுந்தன. இந்த வழக்கிலும் உரிய சாட்சியங்கள் இல்லாததால் மட்டுமே தி.மு.க. தப்பியது.
இது தவிர லீலாவதி கொலை முதல் தா.கிருட்டிணன் கொலை வரையில் பல அரசியல் கொலைகள் தி.மு.க.வின் ஆட்சிக் காலங்களில்தான் அரங்கேறியுள்ளன. அவற்றின் விசாரணைகளை தி.மு.க. ஒருபோதும் நேர்மையாக எதிர்கொண்டது கிடையாது. இதில் அ.தி.மு.க. அரசைப் பற்றி அவதூறு பரப்ப, எந்தத் தகுதியும் தார்மீக உரிமையும் அவர்களுக்குக் கிடையாது என்பதை நாடறியும்.
Discussion about this post