புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட திமுக மாவட்டச் செயலாளர் 10 லட்சம் ரூபாய் கேட்பதாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கடிதம் எழுதியது அக்கட்சியினரிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யப் பல்வேறு கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர் ரகுபதி, அக்கட்சியின் சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் பணம் கேட்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆலவயல் சுப்பையா என்பவர், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், தனது மகன் முரளிதரனுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்குவதற்கு ரகுபதி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ எழுதிய கடிதம் அக்கட்சித் தொண்டர்களிடையே பிளவை ஏற்படுத்தியதுடன் குழப்பத்தையும் விளைவித்துள்ளது.
மேலும் புதுக்கோட்டையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட் கொடுப்பதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக திமுகவில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்காமல், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படுவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர், அலுவலகத்தை விட்டு வெளியேறினர். திமுகவை பொறுத்தவரை வாரிசு அரசியலுக்கு பெயர் போனதாக கூறப்படும் நிலையில், தற்போது, சீட் வழங்குவதற்கும் பணம் கேட்டு அட்டூழியம் செய்து வருவது, அக்கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post