மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: தொண்டர்கள் அதிருப்தி

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தி.மு.க-வில் பெரும் குழப்பமும், தி.மு.க தொண்டர்களிடம் கடும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

எளிய மக்களின் தலைவராகத் திகழ்ந்த அண்ணா, தி.மு.க-வில் சமானியர்களுக்கு பொறுப்புகள் கொடுத்தார். ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்த தம்பிமார்களுக்கு தலைமைப் பதவிகள் வழங்கினார். அண்ணா வழி வந்த அ.தி.மு.க-வில், மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவும், அவர்கள் வழியில் ஆட்சி நடத்தும் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எளியவர்களுக்கே பொறுப்புகளையும், பதவிகளையும் வழங்கி வருகின்றனர். அன்றும் இன்றும் என்றும் அதுதான் அ.தி.மு.க.வில் நடைமுறை.

ஆனால், அண்ணா உருவாக்கிய தி.மு.க-வில், இதற்கு நேர்மாறாக, கருணாநிதியின் வாரிசுகளுக்கும், வாரிசுகளின் ஆசி பெற்ற கோடீஸ்வரர்களுக்கும் பொறுப்புக்களும், பதவிகளும் வழங்கப்படுகிறது. கருணாநிதியின் காலத்திலேயே தொடங்கிவிட்ட இந்த சீரழிவை, இன்னும் தீவிரமாக்கி உள்ளார் மு.க.ஸ்டாலின். அதன்மூலம், தி.மு.க-வை முழுமையான கார்ப்பரேட் கட்சியாக மாற்றி உள்ளார். இதற்கு அண்மை உதாரணம் பிரசாந்த் கிஷோர். அதற்கடுத்த உதராணம் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தி.மு.க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்.

பெண் விவகாரத்தில் சிக்கி, ஏர்போர்ட்டில் அதே பெண்ணிடம் அடி வாங்கிய திருச்சி சிவா, கோவில் திருவிழாவில் தீ மிதித்ததற்காக, கருணாநிதியால் பதவி பறிக்கப்பட்ட அந்தியூர் செல்வராஜ், கட்சியோடு கொஞ்சமும் சம்பந்தப்படாத என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு, தி.மு.க-வில் தற்போது பெரும் குழப்பத்தையும், கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

சிறுபான்மையினர் நலனில் அதிக அக்கறை காட்டுவதுபோல் நாடகம்போடும் மு.க.ஸ்டாலின்… சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக்கூட நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. தமிழகத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் போராட்டங்களில் சிறுபான்மையினரைத் தூண்டிவிடும் மு.க.ஸ்டாலின் அதற்காவது தங்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்த்த மொய்தீன் கான், ஆயிரம் விளக்கு முகமது ஜின்னா, புதுக்கோட்டை அப்துல்லா ஆகியோர் ஏமாற்றம் அடைந்தனர்.

இதேபோல், உதயநிதி வந்துவிட்டதால், இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புக் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க-வில் நிலவியது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. மூன்று முறை… அதாவது 18 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை சுகவாசியாக அனுபவித்த திருச்சி சிவாவுக்கு நான்காவது முறையும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும், பெண் விவகாரம் ஒன்றில் சிக்கி, விமான நிலையத்தில் அந்தப் பெண்ணிடமே அடி வாங்கிய பெருமைக்குரியவர் திருச்சி சிவா. அவருக்கே மீண்டும் மு.க.ஸ்டாலின் வாய்ப்புக் கொடுத்துள்ளதன் மூலம், தி.மு.க என்பது குறிப்பிட்ட சில குறுநில மன்னர்களுக்கான கட்சி என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார் மு.க.ஸ்டாலின் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வரும் திருச்சி சிவாவை, அதற்காகவே ஊக்கப்படுத்தும் விதமாக மு.க.ஸ்டாலின் மீண்டும் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார் என்ற பேச்சும் தி.மு.க தொண்டர்களிடம் எழுந்துள்ளது.

சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் ஸ்டாலின், அதற்கு நேர் எதிரான நாடகம் ஒன்றையும் தற்போது அரங்கேற்றி உள்ளார். 1996 காலகட்டத்தில் கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் அந்தியூர் செல்வராஜ். பண்ணாரி அம்மன் கோவில் திருவிழாவில் தீ மிதித்தார் என்பதற்காக அவரது அமைச்சர் பதவியைப் பறித்தார் கருணாநிதி. அதன்பிறகு கட்சியில் இருந்து  முற்றிலுமாக ஓரம்கட்டப்பட்ட அந்தியூர் செல்வராஜைத் தேடிப்பிடித்து, நாடாளுமன்ற மாநிலங்களவை வேட்பாளராக தற்போது அறிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். இதன்மூலம், தி.மு.க இந்துக்களுக்கு எதிரியல்ல என்று காட்டும் வேலையில் இறங்கி உள்ளார். ஒரு பக்கம் சிறுபான்மை மக்களின் காவலன் நாடகம்… மறுபக்கம் இந்துக்களின் எதிரியல்ல என்றொரு நாடகத்தை மு.க.ஸ்டாலின் நடத்துவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

மு.க.ஸ்டாலின் தேர்வு செய்துள்ள மூன்றாவது வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ. மற்ற தேர்வுகளைவிட என்.ஆர்.இளங்கோவின் தேர்வு விநோதமானது. இவருக்கும் தி.மு.க என்ற கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின். அரக்கோணத்தைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, லட்சக் கணக்கில் கட்டணம் வாங்கும் ஒரு வழக்கறிஞர். கருணாநிதிக்கு மெரீனா கடற்கரையில்  சமாதி அமைக்க இடம் கேட்டு, நீதிமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக ஆஜரானார் என்.ஆர்.இளங்கோ. அதற்காக தற்போது அவருக்கு மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

முதலமைச்சர் பதவியை எதிர்பார்த்து, இலவு காத்த கிளியாக மு.க.ஸ்டாலின் இருப்பதைப்போல, தி.மு.க-வில் பதவி கிடைக்கும் என அந்தக் கட்சியின் உண்மைத் தொண்டர்களும் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இருவருக்கும் கிடைக்கப்போவது ஏமாற்றம்தான் என்கின்றனர் தி.மு.க-வை உற்றுநோக்கும் அரசியல் நோக்கர்கள்!

Exit mobile version