தான் செய்வதையே, போகும் இடமெல்லாம் ஸ்டாலின் சொல்லி வருவதாக விமர்சித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திட்டங்களை செயல்படுத்தி விட்டு தேர்தல் களத்துக்கு வரும் ஒரே கட்சி அதிமுக என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் சந்திப்பில் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். மக்களுக்கான நலத்திட்டங்களை செய்வதாக வார்த்தைகளால் சொல்லிக்கொள்ளும் திமுக அதை ஒருபோதும் செயல்படுத்தியது இல்லை என்று விமர்சித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபடும் திமுகவிற்கு, வரும் சட்டப்பேரவை தேர்தலில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், அம்பத்தூரில் மகளிர் குழுவினர் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெயலலிதா பெண்களுக்காக கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார். பெண்கள் தொழில் தொடங்க 81 ஆயிரம் கோடி ரூபாய் வங்கி இணைப்பு கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
மேடைக்கு மேடை, பெட்டி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெறும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால்தான் நிவர்த்தி செய்வேன் என வெளிப்படையாகவே ஏமாற்றுவதாக சாட்டினார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது பெற்ற மனுக்களின் மீது ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.
முன்னதாக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.
முதலமைச்சரின் உதிவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாகவும், குடிநீர், சாலை உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், செல்போன் மூலம் 1100 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கட்சி பேதமின்றி, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் மற்றும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அதிமுக அரசு விவசாகளின் நலனுக்காக ஏராளமான நன்மைகள் செய்து வருவதாக முதலமைச்சர் கூறினார். தமிழக வரலாற்றிலேயே வறட்சிக் காலத்தில் நிவாரணம் கொடுத்த ஒரே கட்சி அதிமுக என்றும் பெருமிதம் தெரிவித்தார். விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்து, பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இதனை ஸ்டாலின் உணரவேண்டும் என தெரிவித்தார்.
நெசவாளர்களுக்கு தொடர்ந்து பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தார். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
Discussion about this post