தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, காங். பிரமுகர்கள்

தேனியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வந்த தேர்தல் அலுவலர்களை முற்றுகையிட்டு, காங்கிரஸ், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலின்போது வாக்கு இயந்திரங்கள், விவிபேட் உள்ளிட்டவை பழுதானால் எடுத்து செல்வதற்காக திருவள்ளூரில் உள்ள உணவு பாதுகாப்பு கிடங்கில் ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தேனியில் நடைபெறவுள்ள மறுவாக்கு பதிவிற்காக இயந்திரங்களை எடுத்து செல்ல தேனியில் இருந்து தேர்தல் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் விவிபேட், வாக்கு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல முற்பட்டபோது, அங்குவந்த காங்கிரஸ், திமுக, நாம்தமிழர், அமமுக கட்சி பிரமுகர்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தாங்கள் எடுத்து செல்வதாக கூறிய அதிகாரிகள், அதற்கான கடிதத்தையும் அரசியல் கட்சி பிரமுகர்களிடம் காண்பித்தனர். ஆயினும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கையின்போது செயல்படும் முறை குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே இயந்திரங்களை எடுத்து செல்வதாக தெரிவித்தும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரமுகர்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக தேர்தல் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

 

Exit mobile version