அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் திமுகவினர் வாக்காளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் கலர் அச்சு நோட்டை வினியோகம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஆதரவு பெற்ற கட்சியினர் வழங்கிய 20 ரூபாய் டோக்கன் போலவே, தற்போது அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் திமுகவினர் வாக்களர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை போன்று அச்சிடப்பட்ட கலர் ஜெராக்ஸை வினியோகம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கார்வழி பஞ்சாயத்தில், திமுகவின் பரமத்திவேலூர் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் தலைமையில் வாக்குப்பதிவு நேரத்தில் வேட்பாளர் செந்தில் பாலாஜிக்காக டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். காலையில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மாலையில் டோக்கன் கொண்டு வருபவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனையடுத்து டோக்கனை வினியோகம் செய்து வந்த ஜெகநாதனை அதிமுக தொண்டர்கள் கையும், களவுமாக பிடித்து சென்ற போது ஜெராக்ஸை கீழே போட்டு ஓடினார். இதனையடுத்து அந்த ஜெராக்ஸை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். பின்னர் அதிமுகவை சேர்ந்த சிவக்குமார் தேர்தல் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார்.