செங்கோட்டையில் தினகரன் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் உச்சி வெயிலில் தேர்தல் பிரசாரம் செய்ததால், ஏராளமான பெண்களும், மூதாட்டிகளும் சிரமத்திற்குள்ளாகினர்.
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை, தொண்டர்களின் வசதிக்கு ஏற்ப காலையிலும், மாலையிலும் மட்டும் அதிமுகவினர் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தென்காசி நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிடும் தினகரனின் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் பொன்னுத்தாய், உச்சி வெயிலில் வயதான பெண்களையும், இல்லத்தரசிகளையும் நீண்ட தூரம் பிரசாரத்திற்கு அழைத்துச் செல்வதாக, செங்கோட்டை நகர பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, வேட்பாளர் பொன்னுத்தாய் மட்டும், நிழல் கூரை அமைத்து, ஜீப்பில் நின்று வாக்கு சேகரித்தார். பெண்கள், கடும் உச்சிவெயிலில் தலையில் சேலையை சுற்றிக்கொண்டும், குடையைப் பிடித்துக் கொண்டும், கட்சிக் கொடியை தலையில் வைத்துக்கொண்டும், ஒரு கொத்தடிமைகளைப் போல வாக்குசேகரிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதன்மூலம் மக்களுக்கு போதிய நிழல், குடிநீர், மருத்துவ வசதிகளைச் செய்து தரவேண்டும் என்ற தேர்தல் விதியை மீறியுள்ளனர்.
Discussion about this post