மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுகவின் மு.க.அழகிரியை பின்னுக்கு தள்ளியும், அழகிரின் இமேஜை குறைக்கும் வகையில் செய்தி வெளியிட்டதால் மதுரை தினகரன் நாளிதழ் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டது. மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் நடத்திய இந்த தாக்குதலில், தினகரன் அலுவலக ஊழியர்கள் கோபிநாத், வினோத் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அழகிரி ஆதரவாளர்கள் அட்டாக் பாண்டி உள்ளிட்ட17 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இன்று தீர்ப்பு வழங்கியது.
தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்வத்தில் தொடர்புடைய 17 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற 7 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது. மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 3 மாதத்தில் தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.