இருமொழிக் கொள்கை குறித்து பேசி வரும் எதிர்க்கட்சிகள் உலக தமிழ் மாநாட்டை நடத்தாதது ஏன்? என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தில், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை சுட்டிக்காட்டிப் பேசினார். அப்போது, இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த மருத்துவப் புத்தகத்தில், மூலிகைகளின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலினின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், 122 பக்கங்கள் கொண்ட அந்த மருத்துவப் புத்தகத்தில் ஒரு வார்த்தை கூட இந்தி மொழியில் இடம்பெறவில்லை என்றும், மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைகளின் பெயர்களை, மற்ற மாநிலங்களும் அறிந்துகொள்ளும் விதமாக இந்திப் பெயர்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மருத்துவப் புத்தகம் மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகத்தின் நிதியின்கீழ், தேசிய நலவாழ்வு மையத்தின் நிதிஉதவியுடன் அச்சிடப்பட்டதால், இந்திப் பெயர்கள் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.
மேலும், இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும், இரண்டு உலகத் தமிழ் மாநாட்டை அ.தி.மு.க. அரசு நடத்தியதாகவும், தி.மு.க. ஆட்சியில் ஒரு உலகத் தமிழ்நாடு கூட நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.