நீரிழிவு நோய்க்கு ஒரே மருந்தாக இதுவரை இன்சுலின் ஊசிகளே உள்ளன. வலியுள்ள இன்சுலின் ஊசிகளுக்கு மாற்றாக, வாய் மூலம் உண்ணக் கூடிய புதிய மருந்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது என்ன மருந்து? எப்போது சந்தைக்கு வரும்? – இந்தத் தொகுப்பில் பார்ப்போம்…
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு, உலகின் பல்வேறு நாடுகளிலும் செயல்படும் ஆல்டெக் (alltech) மருத்துவ ஆய்வு நிறுவனம், விவசாயம், கால்நடைகள் நலன் ஆகியவற்றில் உலகப் புகழ்பெற்றது.
இவற்றோடு மனிதர்களின் வயது மூப்பிற்கும், நீரிழிவு நோய்க்கும் மருந்துகளை தயாரிக்க, கடந்த சில பத்தாண்டுகளாகவே இந்நிறுவனம் முயற்சித்து வருகின்றது. 20க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த,
நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வாளர்களைக் கொண்டு, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆய்வுகளை தனது 4 ஆய்வகங்கள் மூலம் இந்நிறுவனம் செய்து வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் இயங்கிவரும் ஆல்டெக் நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு, நீரிழிவு நோய்க்கு புதிய மருந்தை சமீபத்தில் கண்டறிந்து உள்ளது.
என்.பி.சி.43 – எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மருந்தை, ஊசிகள் மூலம் மட்டுமின்றி வாய் வழியாகவும் உண்ணலாம் என்று கூறப்படுகிறது. இதனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி ஊசி போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் இனி இருக்காது. முதல்வகை, இரண்டாம் வகை நீரிழிவு நோய்களால் பாதிக்கபட்டவர்களும் இதனால் பயனடைவார்கள்.
ஆனால், இந்த மருந்து சந்தைக்கு வரும் முன்னர், பல்வேறு தரப் பரிசோதனைகளை சந்திக்க வேண்டிய தேவை உள்ளது. மிக முக்கியமாக, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி இந்த மருந்துக்குத் தேவை. இதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்றைக்கு, உலகெங்கும் சுமார் 45 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய நாடு மிக அதிக நீரிழிவு நோயாளிகளைக் கொண்டுள்ளது. இவர்களின் எண்ணிக்கை வரும் 2045ஆம் ஆண்டில், இன்னும் 50 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஒரு எளிய, விலை மலிவான, வலியற்ற மருந்து கட்டாயம் தேவைப்படுகின்றது. அந்தத் தேவையை என்.பி.சி.43 நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Discussion about this post