தனுஷ்…உலக சினிமாவே தற்சமயம் உச்சரிக்கும் ஒரு பெயர். தனது திறமையால் ஹாலிவுட் வரை சென்று தன் பெயரை பதிவு செய்துள்ளார். எல்லம் சாதாரணமாக வந்து விடவில்லை. 2010 வரை தனுஷ் சாதாரண நடிகர் தான். ஆனால் அன்றுவரை 10ல் மூன்று படங்கள் தான் அவரின் நடிப்புக்கு சாட்சியாகவே விளங்கின. அதன்பிறகு படத்திற்கு படம் அவர் நடிப்பு செய்யாத சாதனைகளே இல்லை என்றே சொல்லலாம்.
சினிமாவில் அறிமுகமாகி 17 ஆண்டுகளை கடந்த தனுஷை ஒரே இரவில் உச்சத்தில் கொண்டு விட்டது 3 படத்தில் இடம்பெற்ற “ஒய் திஸ் கொலவெறி” பாடல் தான். அதுவரை நடிகராக இருந்த தனுஷ் இந்த படத்தின் மூலம் பாடகராகவும் உயர்ந்தார். அதன்பிறகு தனுஷின் சினிமா வரலாறு திருப்பி பார்க்கப்பட்டது. “காதல் கொண்டேன்”,“புதுப்பேட்டை”,“பொல்லாதவன்”,“மயக்கம் என்ன” என வித்தியாசமான நடிப்பால் அதன்பிறகு அனைவராலும் கொண்டாடப்பட்டார்.
அந்த கொண்டாட்டத்தை அவர் வெற்றிப்படிக்கட்டுகளாகவே பார்த்தார். பல படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல தரப்பு ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு அங்கீகாரமாக தேசிய விருதுகள் உட்பட பல விருதுகள் அவரை வந்தடைந்தன.
2013ல் ஹிந்தி படமான “ராஞ்சனா” மூலம் பாலிவுட் சென்ற தனுஷ், அடுத்ததாக இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுடன் “ஷமிதாப்”பில் நடித்தார். 2018ல் ஹாலிவுட்டுக்கு சென்றார். தன்னுடைய எல்லா படங்களிலும் புரூஸ்லியை போல காலை தூக்கி சண்டைப் போடுவது போல ஒரு காட்சியை வைத்திருப்பார். அதனால் அவருக்கு “இந்தியன் புரூஸ்லி” என்ற அடைமொழி உண்டு. அதேபோல் நடிக்க வந்த புதிதில் அவரின் மன்மதராசா பாடலுக்கு நான்-ஸ்டாப்பாக நடனம் ஆடி அனைவரையும் வியக்க வைத்தார். தன்னை பற்றி பரவும் சர்ச்சைகளை காதில் வாங்கி கொள்ளாமல் வெற்றியின் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுக்கிறார்.
இன்றைய இளைஞர்களின் ரோல் மாடலாகவே இருக்கிறார் தனுஷ்.காரணம் அவர்களின் நிகழ்கால கேரக்டர்களை திரையில் பிரதிபலிப்பதால் நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். “படிக்காதவன்”, “ஆடுகளம்”,“வேலையில்லா பட்டதாரி”,“வடசென்னை” என இளைஞர்களை கவரும் வகையில் அவருடைய படங்கள் அமைந்தன. அவர் கேரியரில் தோலிவியடைந்த படங்களை இன்று மீண்டும் பார்த்தால் நமக்கே ஏன் இப்படத்தை கொண்டாடடாமல் விட்டோம்? என்ற கேள்வியே மிஞ்சும்.
இணைய உலகமான யு-ட்யூப்பிலும் ஹீரோ தனுஷ் தான். அவரின் “ஒய் திஸ் கொலவெறி” பாடல் யூ-டியூப்பில் 2010ல் 14 கோடிக்கும் மேல் பார்த்தாக வரலாறு சொல்ல, அதை தனுஷின் மற்றொரு பாடலான “ரௌடி பேபி” தட்டி தூக்கியது. 50 கோடிக்கும் மேல் பார்த்த பாடல் என்ற சாதனையை இன்றும் கொண்டுள்ளது.
அவர் எழுதிய பாடல்களில் “பிறை தேடும் இரவில்”,“அம்மா..அம்மா..”,“நீ பார்த்த விழிகள்”,“ரௌடி பேபி” என பல பாடல்கள் இன்றும் பலரின் பேவரைட் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. “வுண்டர்பார் பிலிம்ஸ்” மூலம் தயாரிப்பாளராகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட தனுஷ், சூப்பர்ஸ்டார் ரஜினியின் படத்தை தயாரிக்கும் பெருமையையும் பெற்றதெல்லாம் சாதனை தான்.இயக்குநராக தனது முதல் படமான ப.பாண்டியில் எல்லாரையும் ரசிக்க வைத்திருப்பார். இயக்குநராக தனது முதல் படமான ப.பாண்டியில் எல்லாரையும் ரசிக்க வைத்திருப்பார்.
இன்றைய இளைஞர்களின் கனவு பைக்கான “பல்சர்” பைக்கின் ஐகானே தனுஷ் தான். அவரின் பொல்லாதவன் படம் வந்தப்பிறகு தான் மிகப்பெரியளவில் பேமஸ் ஆனது. அடுத்ததாக ‘அசுரன்’,‘பட்டாசு’ என மாஸ் காட்ட காத்திருக்கிறார்.
அவர் வந்தது என்னவோ சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் தான்…ஆனால் பல தடைகளை தாண்டி தன் நடிப்பால் மட்டுமே யாரும் தொட முடியாத சாதனையை செய்ததெல்லாம் அவருக்கே கை வந்த கலை.
நிச்சயம் தனுஷ் என்னும் இந்த கலைஞன் இன்னும் கொண்டாடப்பட வேண்டும்…..!
Discussion about this post