ஏழை மக்களின் சொத்துக்களை மிரட்டி எழுதி வாங்கியது திமுக என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.
கோவை ஜெ கிருஷ்ணாபுரம் பகுதியில் சூலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட அதிமுக மிகப்பெரிய ஆலமரம் என்றார்.
மக்களின் நம்பிக்கையை பெறாமல் குறுக்கு வழியில் முதலமைச்சராகலாம் என மு.க.ஸ்டாலின் கனவு காண்பதாக விமர்சித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகத்தில் வன்முறை கலாசாரத்தை உருவாக்கியது திமுக எனவும் குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து செஞ்சேரி பிரிவில் பிரசாரம் மேற்கொண்ட துணை முதலமைச்சர், 2023ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து கண்ணம்பாளையத்திற்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ஓ.பன்னீர் செல்வம், தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் நிலையிலும் திமுக வன்முறையில் ஈடுபடுவதாக கூறினார்.
மக்களிடையே கடுமையான அதிருப்தியை பெற்ற கட்சி திமுக என துணை முதலமைச்சர் குற்றம்சாட்டினார். சூலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பள்ளப்பாளையத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக ஆட்சிகாலத்தில் மக்களின் குறைகள் தீர்க்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
Discussion about this post