திமுகவால் தங்களது சாதனைகளை சொல்லி ஓட்டுகேட்க முடியவில்லை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புங்கம்பாடியில் பிரசாரம் செய்தார். அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உடனிருந்தார். புங்கம்பாடியில் திரண்டிருந்த பொதுமக்களிடம் உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், யாருடைய ஆட்சி நல்லாட்சி என்பதனை சீர்தூக்கி பார்த்து வாக்களிக்க கேட்டுக்கொண்டார்.
2023-ம் ஆண்டிற்குள் அனைத்து குடிசை வீடுகளும் காங்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் என உறுதியளித்தார். பெண்களுக்காக அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருவதை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சுட்டிக்காட்டினார்.
ஈசநத்தில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சியை கலைக்கும் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றார். கருணாநிதியால் செய்ய முடியாததை ஸ்டாலினால் ஒருபோதும் சாதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஏழைகளின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிய வரலாறு தான் திமுகவுக்கு உண்டு என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.
இதைத்தொடர்ந்து பள்ளப்பட்டியில் அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில் நாதனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை செய்தார். அப்போது பேசிய அவர், தமிழர் திருநாளன்று ஆயிரம் ரூபாய் வழங்கியதை நினைவு கூர்ந்தார். தேர்தலுக்கு பின்னர் நிச்சயமாக 60 லட்சம் ஏழைகளுக்கு, தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார். இஸ்லாமிய பெருமக்களுக்கு அதிமுக அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களையும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டினார்.
திமுக வன்முறை கட்சி என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விமர்சித்தார். சின்ன தாராபுரத்தில், அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை நிலைநாட்டியது அதிமுக என பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post