புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு பின், பல்லாயிரக்கணக்கானோர் இருந்தாலும் ஒருசில அமைப்புகள் மிக முக்கிய பங்காற்றின. அதேபோன்று பாரதிய கிஷான் அமைப்பின் ராகேஷ் திகாயத்தின் பங்களிப்பு மிக முக்கிய ஒன்று. யார் இந்த ராகேஷ் திகாயத், அப்படி என்ன செய்து விட்டார் அவர்.. வாருங்கள் அறிந்து கொள்வோம்..
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு விவசாய அமைப்புகள் ஒன்றுதிரண்டு டெல்லி சலோ என முழங்கின. அதற்கு மூளையாக செயல்பட்டவர்களில் முக்கியமானவர் தான் ராகேஷ் திகாயத்.
உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த திகாயத், பாரதியா கிஷான் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக பொறுப்பு வகித்து வருகிறார். சட்டம் பயின்ற பின் காவலராக பணிபுரிந்த அவர், பணியை ராஜினமா செய்துவிட்டு விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வடிவை எடுத்தது. இவற்றின் பின்னணியில் செயல்படும் திகாயத்தை கைது செய்ய முடிவு செய்தது டெல்லி காவல்துறை.
பிப்ரவரி மாதம் டில்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் இரவோடு இரவாக திகாயத் காவல் துறையிடம் சரண் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில், “இது போராட்ட களம் அல்ல, போர்க்களம். இங்கு எனது உயிர் போகுமே தவிர நான் சரண் அடையவோ, பின்வாங்கவோ போவதில்லை” என்று மேடை ஏறி முழங்கினார் ராகேஷ் திகாயத்.
ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில், விவசாயிகள் பின் வாங்க நேரிட்ட போது, டிராக்டர் பேரணியை தொடங்குங்கள் என்ற திகாயத்தின் கோரிக்கையே டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தது. எந்தவித சமரசத்திற்கும் ஆளாகாமல், விவசாயிகளின் உரிமைகளை பெறும் கொள்கையின் குன்றாக விளங்கினார் திகாயத்.
இப்போது கூட பிரதமரின் அறிவிப்பை பலரும் கொண்டாடும் வேளையில், நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வமாக ரத்தாகும் வரை போராட்டம் தொடரும் என்று கள அரசியலை புரிந்து கொண்டவராக மிளிர்கிறார் இந்த திகாயத்.
Discussion about this post