ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஐ.பி.எல். லீக் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் தொடரின் 30வது லீக் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. டாஸில் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி ப்ரித்வி ஷா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி ப்ரித்வி வெளியேறினார். அதிரடியாக விளையாடிய தவான் 33 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 57 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஸ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது டெல்லி கேபிடல்ஸ அணி. ரவிச்சந்திரன் அஷ்வின் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில், ஆர்ச்சர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், உனட்கட் 2 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பென் ஸ்டோக்ஸ், பட்லர் ஆகியோர் களமிறங்கினர். பென்ஸ்டோக்ஸ் 41 ரன்களிலும், பட்லர் 22 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 25 ரன்களிலும், உத்தப்பா 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, 8 விக்கெட்களை இழந்த ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்களில் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
டெல்லி அணி தரப்பில் துஷார், அன்ரிச் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா, அஷ்வின், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
4 ஓவர்களில் 33 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அன்ரிச் நோர்ஜே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுவரை 8 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 6 வெற்றி, 2 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தொடரின் 31வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே, சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
Discussion about this post