ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட்டானார். கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 8 ரன்களும், டர்னர் ரன் ஏதும் எடுக்காமலும், பின்னி 19 ரன்களும் எடுத்தனர்.
அதே நேரம் அதிரடியாக விளையாடிய ரஹானே 58 பந்துகளில் தனது சதத்தினை பதிவு செய்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. ஷிகார் தவான் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். பிரித்வி ஷா 42 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இறுதியில் ரிஷாப் பாண்ட் 36 பந்துகளில் 78 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
முடிவில் டெல்லி அணி 19.2 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது
Discussion about this post