டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு, கடந்த 8ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி, பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. சற்றுமுன் வரை ஆம் ஆத்மி கட்சி 58 தொகுதிகளிலும், பாஜக 12 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. குறிப்பாக, புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சி 53.01 சதவீத வாக்குகளும், பாஜக 39.22 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் 4.26 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post