அறிய வகை உயிரினங்களையும், அபூர்வ தாவரங்களையும் உள்ளடக்கியது, பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள். அவை தற்போது அழியும் நிலையில் இருந்து வருகிறது.
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளின் பங்களிப்பு என்பது உலகிற்கு மிக முக்கியமானது. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் சுமார் இருபது சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறது. அது மட்டும் அல்லாது, உலகில் இருக்கும் முக்கியமான பத்து சதவீத தாவரங்களும் உயிரினங்களும் இங்கு தான் உள்ளன.
அமேசான் நதிப் படுகையானது, பல நாடுகளில் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் விரிந்து கிடக்கிறது. நாம் கேள்விப்படாத ஏராளமான உயிரினங்களுக்கு இப்பரப்பு தஞ்சம் கொடுத்திருக்கிறது. பருவமழைகளை வரைமுறைப்படுத்துவதில் இந்தக் காடுகள் மிக முக்கியக் காரணியாக இருக்கின்றன. இந்த மழைக்காடுகளில், 400 வகையான பூர்வகுடிகளும் வாழ்கின்றனர். லாப நோக்கத்துக்காக அந்தக் காடுகள் அழிக்கப்படுவதை அவர்கள்தான் இதுவரை தடுத்துக்கொண்டிருந்தார்கள். இதனால், அமேசான் காட்டின் பெரும்பகுதியானது தப்பிப் பிழைத்திருக்கிறது.
பிரேசில் அதிபராக ஜனவரியில் ஜெய்ர் போல்சோனரோ பதவியேற்ற பிறகு, அமேசான் காடு அழிக்கப்படுவது தீவிரமாகியிருக்கிறது. ஜுலை 24 வரையிலான கணக்கின்படி, 4 ஆயிரத்து 200 சதுர கிலோ மீட்டர் அளவு காடுகள் அழிக்கப்பட்டதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் தெரிவிக்கின்றன.
அமேசான் காடுகளில் 50 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பை பிரேசில் கொண்டிருக்கிறது. இந்தக் காடுகள் இருக்கும் பரப்பில் சில பகுதியை வேண்டுமானால் தனியாருக்கு விற்கலாம் என்ற ரீதியில், போல்சோனரோ பேசியிருக்கிறார். வனச்சட்ட விதிமுறைகள் மாற்றப்படவில்லை என்றாலும், அவருடைய பேச்சு சட்டத்துக்குப் புறம்பாகக் காடுகளைப் பயன்படுத்துவோருக்குத் துணிவைக் கூட்டியிருக்கிறது. ஆயுதம் ஏந்திய வேட்டைக் கும்பல்கள் சமீபத்தில் பழங்குடியினர் பிரதேசங்களில் ஊடுருவின. அப்படிப்பட்ட ஊடுருவலில் அமாபா என்ற இடத்தில் ஒரு பழங்குடித் தலைவர் கொல்லப்பட்டிருக்கிறார். செயற்கைக்கோள் தரவுகளையும், வன்முறை பற்றிய செய்திகளையும் பிரேசில் அதிபர் மறுத்திருப்பது கொஞ்சமும் ஏற்புடையதாக இல்லை.
இந்த நிலையில், பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு ஒன்றை உலக நாடுகள் ஒன்றிணைந்து பிரேசிலில் நடத்துவதாக இருந்தது. ஆனால் இயற்கை வளங்களை அழிக்கும் கார்பரேட் கம்பெனிகளுக்கு துணை போகும் பிரேசில் அதிபர் இந்த மாநாட்டை பிரேசிலில் நடத்த மறுப்பு தெரிவித்திருக்கிறார். இவ்வாறு மறுத்திருப்பதன் மூலம், காடுகளை பாதுகாப்பதற்கு கிடைத்திருக்கக்கூடிய பெரிய அளவிலான நிதியுதவிகளை பிரேசில் இழந்திருக்கிறது. எனினும், பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து நல்லவேளையாக பிரேசில் வெளியேறவில்லை. அப்படிச் செய்திருந்தால், பிரேசிலுக்குரிய ஐரோப்பிய ஒன்றியத்தின் சந்தை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டிருக்கும்.
உலகின் நுரையீரலாக விளங்கும் அமேஸான் காடுகளை காப்பதற்கு, தற்போது உலக அளவில் பெரும் உத்வேகம் ஒன்று காணப்படுகிறது. மழைக்காடுகள் எல்லாம் அகில உலகத்துக்கும் பொதுவான பொக்கிஷங்கள் என்பதையும், பழங்குடியினருக்கும், அவர்களுடைய நிலத்துக்கும் இடையிலான உரிமை பிரிக்க முடியாதது என்பதையும், பிரேசில் அதிபர் உணர வேண்டும். காலநிலை மாற்றம் மனித குலத்திற்கு சவாலாக உள்ள இந்த தருணத்தில், காடுகளை வளர்த்தால்தான் புவி வெப்பமயமாவதை தடுக்கமுடியும் என கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.
Discussion about this post