மயோஃபியா எனப்படும் கிட்ட பார்வை குறைபாடு சமீப காலமாக மக்களிடம் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணங்கள் குறித்தும் சிகிச்சைகள் பற்றியும் விளக்குகிறது இந்த சிறப்பு செய்தி தொகுப்பு…
பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் மயோஃபியா எனப்படும் கிட்ட பார்வை குறைபாடு சில ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் மே மாதம் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதிவரை மயோஃபியா விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அகர்வால் கண் மருத்துவமனையில் இந்த மயோபியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், உலக மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் கிட்டபார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் 2050ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் 10 பில்லியன் மக்கள் தொகையில், 5 பில்லியன் பேருக்கு மயோபியா குறைபாடு ஏற்பட வாய்புள்ளதாகவும், அதில் ஒரு பில்லியன் பேருக்கு உயர் மயோஃபியா இருக்கும் எனவும் தெரிய வந்துள்ளது
பிறந்த குழந்தையாக இருந்தால் பெற்றோரிடம் இருந்தும் அதற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு செல் போன் பயன்பாடு காரணமாக கிட்டப்பார்வை குறைபாடு வரலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 15 வயது வரையிலான பிள்ளைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
அதிக நேரம் தொடர்ந்து கணினியை பார்ப்பது, கண்களுக்கு அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து வேலை கொடுப்பதால் பெரியவர்களுக்கு மயோஃபியா வருவதாக கூறப்படுகிறது. 20 நொடிகளுக்கு ஒருமுறை 20 மீட்டர் தூரத்தினை கண்களால் பார்ப்பது சிறந்த பயிற்சியாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தூரத்தில் இருக்கும் பொருள் மங்கலாக தெரிந்தால் உடனடியாக மருத்துவரைஅணுக வேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் கண் அழுத்த நோய், விழி திரை அகன்றுபோவது உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மயோஃபியா ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அதை முழுமையாக சரி செய்ய முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post