விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் பாமக மற்றும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலித் அல்லாத சமூகத்தினரை சீண்டும் வகையில் முழக்கம் எழுப்பிய இளைஞர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
அந்த இளைஞரின் நடவடிக்கையைக் கண்டிப்பதைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவன் என்று முத்திரை குத்துவதிலேயே பாமக தீவிரம் காட்டி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் சாதி பகையை மூட்டி தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதே பாமகவின் நோக்கமாக உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜாவும் வழக்கம்போல் தன் மீது, காழ்ப்புணர்ச்சியைக் கக்கியிருப்பதாகவும், திமுக கூட்டணிக்கு மறைமுக நெருக்கடியை ஏற்படுத்துவதே சாதிய மதவாத சக்திகளின் உள்நோக்கமாக உள்ளது என்றும் அறிக்கையில் அவர் கூறியுள்ளார். மேலும் விடுதலைச் சிறுத்தைகள் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் பாமக மற்றும் எச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாகவும், திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post