நாடு முழுவதும் உள்ள தேசிய ஆய்வுக் கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்துவதற்காக நாடு முழுவதும் நகர மண்டலத் தொகுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டலத் தொகுப்புகள், நோய் பாதிப்பு அதிகம் காணப்படும் இடங்களான சென்னை உட்பட 19 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆய்வுக்கூடங்கள், இனி கொரோனா பரிசோதனை மையங்களாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 தன்னாட்சி அமைப்புகள் கொரோனா பரிசோதனை செய்யும் மையங்களாக செயல்பட இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய – மாநில அரசுகளின் வழிமுறைப்படி மண்டலத் தொகுப்பு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, இதன் மூலம் நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள இடங்களிலும் பரிசோதனை செய்யும் வசதியை ஏற்படுத்த முடியும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Discussion about this post