அண்ணா திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா-வின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளன்று, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி நினைவிடத்தில், அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக அண்ணா திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலத்தால் அழியாத புரட்சிகரமான திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய புரட்சி தலைவி அம்மாவிற்கு, புகழ் அஞ்சலி செலுத்துவது கழகத்தினர் ஒவ்வொருவரின் இன்றியமைடயாத கடமை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்சித்தலைவி அம்மா-வின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில்,கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நினைவிட வளாகத்தில், உறுதிமொழி ஏற்க உள்ளனர்.இந்த நிகழ்ச்சியில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அம்மாவின் நினைவு நாளான டிசம்பர் ஐந்தாம் தேதி, அனைத்து பகுதிகளிலும் புரட்சித் தலைவியின் திருவுருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துமாறும் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
Discussion about this post