புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் ஒடிசாவின் கோபால்பூர்-சந்த்பாலி இடையே நேற்று கரையை கடந்தது. இதில் 14 மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. ஒடிசாவில் சாலைகள், பாலங்கள், குடிசை வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. வீடுகளின் மேற்கூரைகள், தண்ணீர் தொட்டிகள் சூறாவளி காற்றில் சேதம் அடைந்தன.
இந்தநிலையில், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 24 மணிநேரத்தில் சுமார் 12 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தார். ஒரே இரவில் 7 ஆயிரம் தற்காலிக சமையற் கூடங்கள் மற்றும் 9 ஆயிரம் தற்காலிக தங்கும் இடம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த பணியில் 45 ஆயிரம் தன்னார்வலர்கள் ஈடுபட்டதாகவும் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.